மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 32 புதிய வழித்தடங்களில் மினி பஸ் சேவையை அமைச்சர்கள் பி.மூர்த்தி மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Published Date: June 17, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 32 புதிய வழித்தடங்களில் மினி பஸ் சேவையை அமைச்சர்கள் பி.மூர்த்தி மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

பேருந்து வசதி கிடைக்கப்பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய விரிவான மினிபஸ் திட்டம் 2024 இன் படி புதிய 3103 மினி பஸ் சேவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமையில்  தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 32 வழித்தடங்களில் மினி பஸ் சேவை தொடக்க விழா மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாட்டில் கடந்த 1997 ஆம் ஆண்டு பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களில் வாழும் மக்களுக்காக மினி பஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்திற்கு 250 மினி பஸ் அனுமதி சீட்டுகள் என்ற அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படாத வழித்தடத்தில் 16கி.மீ மற்றும் பேருந்துகள் இயக்கப்படும். வழித்தடத்தில் நான்கு கி.மீஎன மொத்தம் 20 கி.மீ என்ற அளவில் மினி பஸ்க்கள் இயக்கப்பட்டன.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவானது இதன்படி புதிய விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட குக்கிராமங்களை நகர்பகுதிகளுடன் இணைக்கும் வகையில் அதிகபட்ச வழிதட தூரத்தினை 25 கி.மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது மினி பஸ்களை இயக்குவோர் புதிய திட்டத்திற்கு மாறவும் வழிவகை உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2094 புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய திட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்ட 1009 வழித்தடங்கள் என மொத்தம் 3,103 வழித்தடங்களில் புதிய மினி பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Media: Dinakaran